தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தென் மாவட்டங்களை மிரட்டும் கனமழை | குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீர்!…
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்" என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.