அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.
இதனிடையே, கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.