தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்றுமுதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
தென்தமிழகப் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்தமிழ்நாடு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16, 17-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையும், 18, 19 -ம்தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தென் தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் 17-ம் தேதி வரைஅதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, கடலோரப் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கக்கூடும். நாளை முதல் 17-ம்தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 106 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்’ என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.