தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (நவ.20) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து துவக்கம்; பயணிகள் உற்சாகம்!
தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.