நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை முதல் 6ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை மண்டலத்தை ஒட்டிய மலை மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் இலங்கை மற்றும் அதனையொட்டி உள்ள வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களில் தென் தீபகற்பத்தில் பரவலாக லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், நாளை முதல் 6-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திற்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.