சாம்பியன்ஸ் டிராபி | வெற்றி யாருக்கு? இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது. அந்த வகையில், துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (மார்ச் 2) நடைபெறும் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் முறையே வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தது. இதேபோல் மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி லீக் ஆட்டங்களில் 60 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்து அரையிறுதியை எட்டியது.
அரையிறுதிக்கு தகுதி பெற்ற இவ்விரு அணிகளும் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்க தீவிரம் காட்டும். இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்த போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
அணிகளின் விவரம் :
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கீ.), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா
நியூசிலாந்து: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன் , ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (வி.கீ.), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூர்க், கைல் ஜேமிசன்