சாம்பியன்ஸ் டிராஃபி : ரூ.869 கோடி இழப்பை சந்தித்த பாகிஸ்தான்... வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025 போட்டிகள் கடந்த பிப். 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஐசிசி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராஃபியை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.869 கோடி செலவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள மூன்ற மைதானங்களை மேம்படுத்த, மற்றும் போட்டி ஏற்பாடுகள் என மொத்தம் பாகிஸ்தான் ரூ.869 கோடி செலவிட்டது.
ஆனால் ஐசிசி நிதி, விளம்பரம் போன்றவை மூலம் வெறும் ரூ. 52 கோடி மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாயாக கிடைத்துள்ளது. டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மிகக் குறைவாக இருந்தது. இதனால் 85 சதவீத முதலீட்டு இழப்பை சந்தித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக சாம்பியன்ஸ் டிராஃபி விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியத்தில் 90 சதவிகிதமும், ரிசர்வ் வீரர்களின் ஊதியத்தில் 87.5 சதவிகிதமும் பிடித்தம் செய்ய பிசிபி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.