சாம்பியன்ஸ் ட்ராபி | இந்தியாவுக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான் அணி!
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் - இமாம் உல் ஹக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பாபர் அசாம் 23 ரன்களிலும், இமாம் உல் ஹக்கும் 10 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். இதில் சவுத் ஷகீல் 62 ரன்களிலும், ரிஸ்வான் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து சல்மான் அலி ஆகா மற்றும் தையப் தாஹீர் ஜோடி சேர்ந்தனர். இதில் தையப் தாஹீர் 4 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் சல்மான் அலி ஆகா 19 ரன்னிலும், அடுத்து களம் புகுந்த ஷாகீன் ஷா அப்ரிடி ரன் எடுக்காமலும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட உள்ளது.