நியூஸிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டி - இந்திய அணியின் கேப்டனாகும் சுப்மன் கில்?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக மைதானத்தைவிட்டு வெளியே சென்று சிறிது ஓய்வு எடுத்தார். இதனிடையே துணைக் கேப்டன் சுப்மன் கில் அணியை வழிநடத்த முன்வந்தார். பின்பு சில ஓவர்கள் கழித்து மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க ரோகித் களத்திற்கு வந்தார்.
ரோகித் காயத்தில் இருந்து இன்னும் 100% தேறிவிட்டாரா? என்பது குறித்து தெரியாத சூழலில், அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. தொடர்ந்து நாளை(மார்ச்.02) நடைபெறவுள்ள இந்தியா - நியூஸிலாந்து போட்டியில் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என்றும் ரோகித் சர்மாவுக்கு பதில் ரிஷப் பண்ட் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.