ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகுகிறார் #ChampaiSoren
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகுவதாக இடைக்கால முதலமைச்சராக இருந்த சம்பாய் சோரன் அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் சில மாதங்கள் முதலமைச்சராக பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரன் ஜூன் மாதம், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிறிது காலம் இடைக்கால முதலமைச்சராக பொறுப்பு வகித்த சம்பாய் சோரன், முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் மன வருத்தத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் பாஜகவில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியானது.இந்த நிலையில், ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பாஜகவில் சேரப் போவதாக வெளியாகியுள்ள தகவல் ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் அளித்த பேட்டியில் சம்பாய் சோரன் முதலமைச்சராக சிறப்பாக செயல்பட்டதாகவும், அவரது செயல்பாட்டால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இந்த நிலையில், அவர் முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என பேசியிருந்தார்.
சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்கள் மற்றும் 6எம்.எல்.ஏக்களுடன் இன்று காலை டெல்லி சென்றுள்ளார். இதனிடையே அவர் சிலநாட்கள் டெல்லியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சாம்பாய் சோரன் டெல்லி சென்றிருப்பதால் பாஜகவில் இணைய இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. இதனிடையே டெல்லி பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய சம்பாய் சோரன் “ எனது தனிப்பட்ட வேலைகளுக்காக டெல்லி வந்துள்ளேன்” எனக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் இடைக்கால முதலமைச்சராக இருந்தவரான சம்பாய் சோரன் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது..
“ எனக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் கிடைக்கவில்லை. பல்வேறு அவமானங்களைச் சந்தித்துவிட்டேன். இதன் காரணமாக, மாற்றுப்பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன். கடந்த 3 நாட்கள் எனைப் பற்றி பேசப்படும் கருத்துக்கள் எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது.
என்னுடைய வாழ்வில் இன்றிலிருந்து புதியதொரு அத்தியாயம் துவங்குகிறது. என் முன் 3 வாய்ப்புகள் உள்ளன; ஒன்று, நான் அரசியலிலிருந்து விலக வேண்டும், இரண்டு, தனியாகக் கட்சி ஆரம்பிக்கலாம், மூன்று, எனக்கு துணையாக இந்த பாதையில் பயணிக்க யாரேனும் வந்தால் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலாம்.
जोहार साथियों,
आज समाचार देखने के बाद, आप सभी के मन में कई सवाल उमड़ रहे होंगे। आखिर ऐसा क्या हुआ, जिसने कोल्हान के एक छोटे से गांव में रहने वाले एक गरीब किसान के बेटे को इस मोड़ पर लाकर खड़ा कर दिया।
अपने सार्वजनिक जीवन की शुरुआत में औद्योगिक घरानों के खिलाफ मजदूरों की आवाज…
— Champai Soren (@ChampaiSoren) August 18, 2024
எதிர்வரும் ஜார்க்கண்ட சட்டப்பேரவைத் தேர்தல் வரை, எனக்கு மேற்கண்ட அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அவற்றுள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.
கட்சியை காயப்படுத்தும் நோக்கம் என்னிடம் இல்லை. எந்தவொரு கட்சி உறுப்பினரையும் நான் குறிப்பிட்டுப் பேசவில்லை . ஒரு முதலமைச்சராக நான் பொறுப்பு வகித்த காலத்தில் என் கடமையை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். நம்முடைய ரத்தமும் வியர்வையும் ஊட்டி வளர்க்கப்பட்ட கட்சியை காயப்படுத்தும் எண்ணம் ஒருபோதும் எனக்கு எழாது" எனப் சம்பாய் சோரன் பதிவிட்டுள்ளார்.