சென்னையில் பட்டப்பகலில் செயின் பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் குற்றவாளி கைது!
சென்னை, பெருங்குடி ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மணியளவில் ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயில் நிலையத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாவகாசமாக அமர்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த தங்க செயினைப் பறித்துக்கொண்டு தப்பித்துள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த துணிச்சலான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் செயின் பறிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், திருவான்மியூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, செயினைப் பறித்த நபரின் செயல் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
மேலும் அருகில் அமருவது போல் நடித்து, மிகவும் சாமர்த்தியமாக அந்த நபர் செயினைப் பறித்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட திருவான்மியூர் போலீசார், துரிதமாகச் செயல்பட்டு தற்போது அந்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் செயின் பறிப்பிற்கான காரணம் மற்றும் வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தச் செயின் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விரைந்து குற்றவாளியைக் கைது செய்தது பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.