சென்னை | தாம்பரம் அருகே ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு!
சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் 'கடல் கன்னி ஷோ' என்ற நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அந்த வகையில், ஈஸ்வரி (வயது 56) என்பவர் தனது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியை காண சென்றிருந்தார்.
நிகழ்ச்சியை பார்த்த பிறகு ஈஸ்வரி வெளியே வந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க தாலி சங்கிலியை மர்ம நபர் பறிக்க முயற்சி செய்தனர். சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரி தாலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இருப்பினும் ஐந்து சவரன் சங்கிலியை அறுத்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதேபோல் தாம்பரத்தில் மற்றொரு செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள தேவராஜா தெருவை சேர்ந்தவர் இந்திரா. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அவரை இருவர் பின் தொடர்ந்து வந்தனர். இந்திரா வீட்டின் கேட்டை திறக்க முற்பட்டபோது அவரின் கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் அறுத்து கொண்டு தப்பி சென்றனர்.
கொள்ளையர்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் காந்தி சாலை சந்திப்பில் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் என 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.