கருவாய்ப் புற்றுநோய் தடுப்பூசி: இந்தியா முழுவதும் இலவசமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை - விசிகவின் தொடர் முயற்சிக்கு வெற்றி!
கருவாய்ப் புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்காக, மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தொடங்கியுள்ளதாக திருமதி. அனுப்ரியா படேல் குறிப்பிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை (விசிக) சேர்ந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தார். இது, கடந்த ஆறு ஆண்டுகளாக முனைவர் ரவிக்குமார் எம்.பி. மேற்கொண்டு வந்த தொடர் முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி என விசிக தெரிவித்துள்ளது.
உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் (UIP) கீழ் HPV தடுப்பூசியைச் சேர்ப்பதில் ஏற்பட்டு வந்த தாமதம் குறித்து முனைவர் ரவிக்குமார் எம்.பி. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், "ஜூன் 2022 இல், நோய் சுமை, தடுப்பூசியின் ஒரு டோஸின் செயல்திறன், மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் பிற தொடர்புடைய தரவுகள் தொடர்பான புதிய ஆதாரங்களின் அடிப்படையில், உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் (UIP) கருவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) பரிந்துரைத்தது" எனத் தெரிவித்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் கருவாய்ப் புற்றுநோய் தடுப்பூசி குறித்து முனைவர் ரவிக்குமார் எம்.பி. தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவரது வலியுறுத்தலின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் இந்தத் தடுப்பூசித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தற்போது, இந்தியா முழுவதும் இந்தத் தடுப்பூசித் திட்டம் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகிலேயே கருவாய்ப் புற்றுநோயால் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் உயிரிழப்பது இந்தியாவில்தான் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பெண்கள் இந்த நோயால் இந்தியாவில் உயிரிழக்கின்றனர்.
இந்தியாவிலுள்ள மாநிலங்களில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த இலவச தடுப்பூசித் திட்டம் லட்சக்கணக்கான பெண்களின் உயிரைக் காப்பாற்றும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.