“குறிப்பிட்ட கட்சியினர் என் குடும்பத்தை தரக்குறைவாக...” - திமுகவில் இணைந்த பிறகு வைஷ்ணவி அறிக்கை!
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இன்று(மே.22) இணைந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் கடந்த மே 3 ஆம் தேதி தவெகவில் இருந்து விலகினேன். நான் ஒருபோதும் பதவிக்காக ஆசைப்பட்டது கிடையாது. எனது நோக்கம் சமூக பணி செய்வதே. தினமும் மக்களுக்கு என்னால் ஏதாவது உதவி செய்துவிடமுடியாதா? என்றே நான் என் தினப் பொழுதை கடந்து வருகிறேன். தவெகவில் இருந்து விலகிய போதும் கூட எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தினமும் என்னால் முடிந்த மக்கள் பணியைச் செய்து வந்தேன்.
தவெகவில் இருந்து விலகியவுடன் பல கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தபோதும், நான் உடனே எந்த முடிவையும் எடுக்கவில்லை. என் அம்மா திமுகவில் கடந்த 15 வருடங்களாக களப்பணி செய்து வந்தார். நான் தவெகவில் இணைந்த சில மாதங்களுக்கு பிறகு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் எனது அரசியல் பயணத்திற்காகவும் என் அம்மா தன்னுடைய அரசியல் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருந்தார். ஆனால், நான் படும் கஷ்டங்களைக் கண்டு எனது தாயும் மனஉளைச்சலுக்குத் தள்ளப்பட்டார்.
இப்போது நான் தீர்க்கமான முடிவை எடுத்திருக்கின்றேன். எனது சமூகப்பணி தொடர நானும் எனது குடும்பமும் பாதுகாப்பாக இருக்க, தெளிவான, மக்களுக்கான அரசியலைக் கையில் எடுக்கவேண்டும் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்துள்ளேன்.
தமிழ்நாடு வளர்ச்சிக்கு குறிப்பாக பிறக்கும் குழந்தை தொடங்கி, மழலை பிள்ளைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள், பெண்கள். குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள். முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைத்து துறை அரசு ஊழியர்கள் என எல்லா தரப்பிற்குமான அரசாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, கல்வியில் வளர்ச்சி புதிய வேலைவாய்ப்புகள் என மற்ற மாநிலத்திற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த ஆட்சியை காட்டிலும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப்பிறகு தமிழ்நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை.
நான் தவெகவில் இருக்கும்போது திமுகவின் மீது கடுமையாக விமர்சனங்களை வைத்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் என்னையோ என் குடும்பத்தையோ தனிப்பட்ட முறையில் அவதூறுகள் பரப்புவது. மிரட்டுவது என எதுவும் நடந்தது இல்லை. எனது கருத்தை கருத்தியலாக எதிர்கொண்டனர். அது ஒரு ஆரோக்கியமான விவாதமாகவே அமைந்தது.
ஆனால், சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலர் என்னையும் என் குடும்பத்தையும் தரக்குறைவாக சமூக வலைதளங்களில் பேசி வருவதையும் நான் பார்த்தேன். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்றே ஒன்றுதான் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பீஷ் கருத்தை கருத்தியலாக எதிர்கொள்வோம் களத்தில் சந்திப்போம். இனி எனது சமூகப்பணி முழு வீச்சுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் செய்துகொண்டு இருக்கும் மக்கள் பணிக்கு எந்த இடையூறும் வராது. நீங்கள் தொடர்ந்து களத்தில் இருந்து செயல்படுங்கள் என நம்பிக்கை கொடுத்த முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.