“பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது” - #CPIM கண்டனம்!
அண்மையில் தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) உதவி செயற்பொறியாளர் மற்றும் சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு சட்ட அலுவலர் (Law Officer) மற்றும் 3 உதவி செயற்பொறியாளர் (Assistant Executive Engineer) என மொத்தம் 4 காலியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மே 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்விற்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதன்படி, விண்ணப்பித்து தேர்வெழுதியவர்கள் ஒருவர் கூட சட்ட அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வாகவில்லை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், VOCPT பணியிடங்களுக்கு ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிப்பதற்காக ஒன்றிய அரசு அட்டூழியம். எழுத்து தேர்முக நேர்முகத்தேர்வு அனைத்தையும் நடத்திவிட்டு தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகம் யாரும் தகுதி இல்லை என தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சித்திருக்கிறார்கள்” என தெரிவித்து தேர்வு முடிவு குறித்த அறிக்கையையும் பகிர்ந்துள்ளார்.