For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சென்னை #Metro ரயில் 2-ஆம் கட்ட மதிப்பீட்டுச் செலவில் 65%-ஐ மத்திய அரசு வழங்குகிறது" - #UnionGovt அறிவிப்பு

05:52 PM Oct 05, 2024 IST | Web Editor
 சென்னை  metro ரயில் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுச் செலவில் 65  ஐ மத்திய அரசு வழங்குகிறது     uniongovt அறிவிப்பு
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட மதிப்பீட்டுச் செலவில் 65%-ஐ மத்திய அரசு வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 'மத்திய துறை' திட்டமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு 05.10.2024 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுவரை இந்தத் திட்டம், மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில் சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில் 'மாநிலத் துறை' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது. இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு அதற்கு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும். எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும். பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் -க்கு நேரடியாக வழங்கப்படும்.

மத்திய அரசால் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன், திட்டத்திற்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசு குறித்ததாக இருந்தது. மத்திய அமைச்சரவை ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகிய இருதரப்பு மற்றும் பன்னாட்டு முகமைகளை நிதி அமைச்சகம் அணுகும்.

இதற்கான அம்சங்கள் வருமாறு:

(1) இந்தக் கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாகக் கருதுதல்,

(2) சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து கடன் தொகை மாநில அரசுக்கும் மாநில அரசின் பட்ஜெட்டிலிருந்து சிஎம்ஆர்எல் (CMRL) நிறுவனத்திற்கும் செல்லும் தற்போதைய வழிமுறைக்கு மாறாக, சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து மத்திய அரசுக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து பாஸ் த்ரூ உதவி (pass-through assistance) என்ற முறையில் நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்  (CMRL) நிறுவனத்திற்கு செல்லும் வழிமுறையாக மாற்றியமைத்தல்,

(3) சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மாநில அரசு இருக்கும் இடத்தில் சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க, முகமையாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்பட நியமித்தல்.

கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்ளில் இந்த மாற்றங்களுக்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இது விரைந்து முடிக்கப்படும்.

கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்தைச் சார்ந்தது. திருப்பிச் செலுத்துதல், பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டு மாரடோரியம் (moratorium) காலத்திற்குப்பின், அதாவது ஏறத்தாழ திட்டம் முடிந்த பின் தொடங்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சி.எம்.ஆர்.எல். இல்லாத பட்சத்தில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Tags :
    Advertisement