Andhra மழை வெள்ள பாதிப்பை #NationalDisaster அறிவிக்குமா மத்திய அரசு?
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் இரு மாநிலங்களிலும் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 17 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள், 16 பேர் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 62,000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
விஜயவாடா, மொகல்ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையின் காரணமாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகியது. மேலும், ஆந்திரா, தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல இடங்களில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் ஆந்திரா, தெலுங்கானாவில் செப்டம்பர் 6ம் தேதி வரை 438 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 137 ரயில் சேவைகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பின்னர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய பேரிடர் இதுதான், ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நாளைக்குள் மீட்கப்படுவார்கள். கடந்த ஆட்சியில் எந்த பேரிடர் மேலாண்மை திட்டங்களும் செய்யப்படாததால் தான் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படக் காரணம்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்