2014 முதல் ரூ.1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை - மத்திய அரசு தகவல்!
2014 ஆண்டு முதல் ரூ. 1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ரூ. 1.16 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு (டிச.14) வியாழக்கிழமை தெரிவித்தது.
இதையும் படியுங்கள் : நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
இதுதொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது;
"சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014 ஜனவரி முதல் 2023 அக்டோபர் 31 ஆம் தேதி வரை ரூ. 1,16,792 கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை தற்காலிகமாக முடக்கி, ரூ. 16,637.21 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது.
வெளிநாடு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தடைச்சட்டம் 2018-இன் கீழ் ரூ.16,740.15 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி, ரூ.15,038.35 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2023 மார்ச் 31 ஆம் தேதி வரையிலான 4 ஆண்டு காலத்தில் மட்டும் ரூ. 69,045.89 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியது.
மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் வெளிநாடு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளில் நால்வர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் மூவரை இந்தியாவுக்கு நாடு கடத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.