32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கியது. இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக வடமேற்கு பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் மே 15 ம் தேதி வரை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மூடப்பட்டுள்ள 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.