பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
பஹல்காம் தாக்குதலுக்கு பின், பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதே போல் பாகிஸ்தானும் இந்தியா மீது பல நடவடிக்கைகள் எடுத்தது. இது இரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்தது. இதில் பாகிஸ்தானின் சமூக வலைத்தள கணக்குகளை இந்தியா முடக்கியது. தொடர்ந்து பாகிஸ்தானை தாயகமாக கொண்ட ஃபவாத் கான், மஹிரா கான், ஹனியா அமீர், அதிஃப் அஸ்லம் உள்ளிட்ட நடிகர்களின் சமூக வலைத்தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டது.
தொடர்ந்து ஃபவாத் கான் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் (FM) வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்தது.
இரு நாடுகளின் இந்த தொடர் நடவடிக்கைகளுக்கு பிறகு, போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. இந்த சூழலில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரித்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் மற்றும் 16 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் OTT தளங்களக்கு இந்திய அரசு கட்டுபாடு விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தேசியப் பாதுகாப்பின் நலனுக்காக, இந்தியாவில் செயல்படும் அனைத்து OTT தளங்கள், மீடியா ஸ்ட்ரீமிங் தளங்கள் பாகிஸ்தானின் வெப் சீரீஸ்கள், திரைப்படங்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் மீடியா உள்ளடக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.