டெல்லியில் தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை!
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, வர்த்தக தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது.
இதற்கிடையே பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து மோடி உத்தரவிட்டார். தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஏவுகணை சோதனையை நடத்தியதால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சூழலில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. அதில் பாதுகாப்பு ஒத்திகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஒத்திகை நாடு முழுவதும் 244 இடங்களில் நடைபெறுகிறது.
ராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள். அணுமின் நிலையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்பு உளவியல் ரீதியாக எதிர்வரும் சூழ்நிலைகளுக்கு பொதுமக்களை தயார்படுத்தும் விதமாகவே இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுடன் இன்று மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது. டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், Civil Defence இயக்குநரக தலைவர்கள், தேசிய பேரிடர் மீட்பு ஆணைய அதிகாரிகள், 244 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.