“மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது” - CISF 56வது ஆண்டுவிழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (RTC) செயல்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் இன்று(மார்ச்07) CISF-ன் 56வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு வீரர்களின் எழுச்சி தின அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது "நாடு முழுவதும் உள்ள CISF பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் சீரான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதில் CISF முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மத்திய அரசு நடத்தும் CAPF தேர்வு தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளில் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவம் படிப்புகளை தமிழில் கற்பிக்க நடவடிக்கை எடுங்கள் என்று நீண்ட காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி வருகிறேன்"
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.