வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
நாடாளுமன்றத்தில் அண்மையில் முடிவடைந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா ஜேபிசி குழுவிடம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இக்குழுவில் பாஜக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், அவர்கள் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு
அவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்பட்டது.
44 திருத்தங்கள் செய்யப்பட்ட இந்த மசோதாவை கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் பின்பு நடந்த பல மணி விவாதங்களில் எதிர்க்கட்சியினர் கடுமையாக மசோதாவை எதிர்த்தனர். இருப்பினும் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி 288 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவால் அன்று நள்ளிரவே மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அடுத்த நாள் 128 உறுப்பினர்களின் ஆதரவால் மாநிலங்களவையிலும் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை வரும் 16ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.