வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெங்காயம் மீது ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. வரி விதிப்புக்குப் பிறகும், நடப்பு நிதியாண்டின் மார்ச் 18ம் தேதி வரை 11.65 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் 0.72 லட்சம் டன்னாக இருந்த வெங்காயம் ஏற்றுமதி, கடந்த ஜனவரியில் 1.85 லட்சம் டன்னாக உயர்ந்தது.
அதேபோல், நடப்பு குளிர்கால பருவத்தில் வெங்காயம் உற்பத்தி 2.27 கோடி டன்னாக முந்தைய ஆண்டின் 1.92 கோடி டன்னை விட18 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று வேளாண் அமைச்சகம் கணித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை திரும்ப பெற்றுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது, "குளிர்கால (ரபி) பயிர்களின் மகசூல் எதிர்பார்ப்பைவிட அதிகரித்துள்ளது. இதையொட்டி மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் வெங்காய விலை குறிப்பிட்டத்தக்க அளவில் சரிந்துள்ளது.
இந்த சூழலில் நுகர்வோருக்கு மலிவு விலையைப் பராமரிக்கும் அதேவேளையில் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிப்பாட்டை இந்த முடிவு எடுத்துரைக்கிறது. எனவே வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை திரும்ப பெற்றுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.