பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது மத்திய அரசு திணிக்கிறது - மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு
பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது மத்திய அரசு திணிப்பதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்திற்குப் பின் திமுக உறுப்பினர் வில்சன் பேசியதாவது:
“மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நாட்டு மக்கள் மீது திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுப்பு ஆகியவற்றை நிர்வகிக்கும் அனைத்து மதங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒருங்கிணைந்த தனிநபர் சட்டங்களின் தொகுப்பை, பொது சிவில் சட்டம் (UCC) முன்மொழிகிறது.
பொது சிவில் சட்டமானது அமல்படுத்தப்பட்டால், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சீக்கியர்களுக்கான தற்போதைய தனி சட்டங்கள் ஒரு பொதுவான சட்டத்தால் மாற்றப்படும். இதன் மூலம் அனைத்து மதங்களின் பழக்கவழக்கங்களையும் ஒழித்து மதச்சார்பின்மையை அழிக்க மத்திய அரசு சிந்திக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா என்பது பரந்த அளவிலான மத, கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகளை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை கொண்ட நாடு. இந்து மதத்திற்குள், பல துணை கலாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனிப்பட்ட அடையாளம், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் வேறுபடுகின்றன.
அனைத்து மதங்கள், உட்பிரிவுகள் மற்றும் பிரிவுகள்மீது ஒரே மாதிரியான தனிநபர் சட்டங்களை திணிப்பது அவற்றின் தனித்துவத்தையும் வளமான பன்முகத்தன்மையையும் அழிக்கக்கூடும்.
இவ்வாறு திமுக எம்.பி. பி.வில்சன் உரையாற்றினார்.