ஓலா, உபர் வாடகைக் கார் நிறுவனங்களுக்கு CCPA நோட்டீஸ்!
கைப்பேசி செயலிகள் மூலம் செயல்படும் வாடகைக் கார் நிறுவனங்களான ஓலா, உபர் ஆகியவற்றுக்கு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பேசி செயலி மூலம் வாடகைக் கார், ஆட்டோ பயன்படுத்தும் சேவையை ஓலா, உபர் நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இத்துறையில் இந்த இரு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஒரே இடத்துக்கு பயணிப்பதற்கு ஆண்ட்ராய்டு கைப்பேசி மூலம் பதிவு செய்தால் சற்று குறைவான கட்டணமும், ஆப்பிள் ஐபோன் மூலம் பதிவு செய்தால் சற்று கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதாவது ஐபோன் வைத்திருப்பவர்கள் வசதியானவா்களாக இருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் கட்டணத்தை உயா்த்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
இது தொடர்பாக தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்தகவலை மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உறுதிப்படுத்தியுள்ளார்.
‘இந்தியாவில் நுகர்வோரைச் சுரண்டும் நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அதனை அரசு சகித்துக்கொள்ளாது. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்’ என்று ஜோஷி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டண விவகாரம் தொடா்பான குற்றச்சாட்டுக்கு ஓலா நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.