திகார் சிறையில் இருக்கும் பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவர் கவிதாவை சிபிஐ கைது செய்தது!
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் திகார் சிறையில் இருந்த கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
திகார் சிறையில் இருக்கும் கவிதாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியது. கே.கவிதா உடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சி பாபுவின் போனில் இருந்து நிலம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 100 கோடி ரூபாய் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். டெல்லி மதுபான கொள்கை மோசடியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிக்கியுள்ளனர். சமீபத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.