கடைமடைக்கு வந்த காவிரி நீர் - கும்மியடித்து, மலர்தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்!
காவிரி கடைமடையான நாகை மாவட்டம் இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர்கள் மற்றும் விதை நெல்கள் தூவியும், கும்மியடித்தும் உற்சாகமாக விவசாயிகள் வரவேற்றனர்.
ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும். ஆனால் இந்த வருடம் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் மழை இல்லாததும், கர்நாடகா தண்ணீர் திறக்காததுமே ஆகும். தொடர்ந்து கர்நாடகாவில் பெய்த கனமழையால் கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பின. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்தது.
இதில் மேட்டூர் 43வது முறையாக முழு கொள்ள ளவை எட்டியது. இதனையடுத்து கடந்த ஜூலை 28ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்து அங்கிருந்து கடந்த 31-ம் தேதி நாகை, திருவாரூர் மாவட்ட பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து பாண்டவையாற்றின் மூலம் நாகை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான கீழையூர் ஒன்றியம் இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் காவிரி வே. தனபாலன் தலைமையில் தடுப்பணைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் மற்றும் விதை நெல் தூவியும் பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றனர். தொடர்ந்து சட்ரஸ்-க்கு தீபாரதனை எடுத்தும், சூரிய பகவானை வழிபட்டு விவசாயம் செழிக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர். காவிரி நீர் வந்ததை வரவேற்கும் பொருட்டு பெண்கள் கும்மி பாட்டுப்பாடி வரவேற்றனர்.
இந்த பாண்டவையாற்றின் மூலம் இறையான்குடி, வடக்கு பனையூர், தெற்கு பனையூர், வல்லவினாயகன் கோட்டம், களத்திடல்கரை, மகிழி உள்ளிட்ட விவசாய நிலங்கள் பயனடைகின்றன.