ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1,15,000 கன அடியிலிருந்து தற்போது வினாடிக்கு 1,25,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் 4-வது நாளாக தடை விதித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆற்றுப்பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.