காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் : நீர்வளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், வழக்கறிஞர் முனியசாமி
உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,
“காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்தது. இதன் மூலம் விவசாயிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பயனடைவர். ஆனால் இந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்த அரசு தரப்பில் எந்த முனைப்பும் காட்டவில்லை. எனவே காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் கடந்த சில மாதங்களுக்கு முன்
விசாரணைக்கு வந்தது. அப்போது, “3 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு முதல் கட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 9 கிலோ மீட்டர் கட்டுமான பணிகள் தொடங்கி விட்டது. 3. கட்டங்களுக்கும் நிலம் கையகப்கடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதிக இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளனர். தனி நீதிபதியிடம் வழக்குகள் நிலுவையில் உள்ளது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டது. திட்டத்தை வேகப்படுத்த
வேண்டும். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வில் விசாரிக்க வேண்டும். இந்த திட்ட பணிகள் எந்த அளவுக்கு நடந்து உள்ளது, முன்னேற்றம் கண்டு உள்ளது? என்பது குறித்து பொதுப்பணித்துறையின் நீர் வளத்துறை தலைமை பொறியாளர் 3 மாதங்களுக்கு ஒரு முறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள், நிஷா பானு , ஸ்ரீமதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் இந்த திட்டம், மிகவும் மந்தமாக நடைபெறுகிறது எனக் கூறினர். தொடர்ந்து நீதிபதிகள், காவிரி- குண்டாறு-வைகை இணைப்பு திட்ட ம் ஏன் தாமதமாகிறது?. திட்டத்தை விரைவுபடுத்த என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் என்பது குறித்து, நீர் வளத்துறையின் தலைமை பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.