சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்...அபராதத்தை உயர்த்திய சென்னை மாநகராட்சி!
சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கான அபராதத் தொகை ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. அதே நேரத்தில் சாலையில் செல்பவர்களையும் கால்நடைகள் தாக்குகிறது. இதனை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் காலைநடைகள் திரிந்தால், அவை பிடிக்கப்பட்ட கால்நடைகளில் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் மாநகரின் பல இடங்களில் கால்நடைகள் சாலைகளில் திரிவதாக கூறப்படுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கான அபராதத் தொகை ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிடிக்கப்படும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் 2 நாட்களுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால், 3வது நாளில் இருந்து கால்நடைகளில் பராமரிப்பு செலவுக்கு ரூ.1000 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.