பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அப்பெண்ணின் கணவர் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மதுமதி (33) தனது வீட்டின் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது சாலையில் வந்த எருமை மாடு ஒன்று மதுமதியை முட்டி தள்ளியதில், அவர் தரையில் விழுந்தார். மாட்டின் கொம்பில் சிக்கி கொண்ட மதுமதியை 500 மீட்டர் இழுத்து சென்றது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாடு பிடிக்கப்பட்டு பெரம்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது சம்பந்தமாக வினோத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் இங்கிலாந்து சென்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
IPC 289, விலங்கினால் மனித உயிருக்கு ஏதாவதொரு ஆபத்து விளைவித்தல் அல்லது
கொடுங்காயம் விளைவித்தல் மற்றும் 338 மனித உயிருக்கு அபாயத்தை உண்டாகும் விதத்தில் அல்லது பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரண்டு பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு உள்ளாக மாட்டு மந்தை பகுதி இருப்பதால் மாடு அங்கிருந்து வந்ததா அல்லது வேறு யாரேனும் உரிமையாளர்களா என்ற கோணத்தில் திருவொற்றியூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.