”யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் மீது சாதி சாயம்... ” - தவெக தலைவர் விஜய் கண்டனம்!
தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு தவெக தலைவர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வந்தார். அந்த வகையில் இந்தாண்டு முதற்கட்டமாக 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கல்வி விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்து மாணவ மாணவியருக்கு விஜய் ஊக்கத்தை வழங்கி வருகிறார்.
இந்த விழாவில் அவர் பேசியதாவது, “உங்கள் சாதனைக்கு எனது வாழ்த்துகள். படிப்பில் சாதிக்க வேண்டும் அதை நான் மறுக்கவில்லை. ஆனால் படிப்பில் மட்டுமே சாதனை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரே காரியத்தை யோசித்து மன உளைச்சல் ஆக வேண்டிய அவசியம் இல்லை. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நீட் மட்டும்தான் உலகமா?. அதைத் தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் சாதிக்க பல உள்ளன. அதனால் மன உறுதியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
ஜனநாயகம் இருந்தால்தான் இந்த உலகத்தில் இருக்கும் எல்லா துறையும் சுதந்திரமாக இருக்க முடியும். முறையான ஜனநாயம் இருந்தால் எல்லோரும் எல்லாம் இலகுவாக கிடைக்கும். அதனால், உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் ஜனநாயக கடமையை ஒழுங்காக செய்யச் சொல்லுங்கள். அது சாதாரணமான காரியம்தான் நல்லவர்கள் மற்றும் இதுவரை ஊழல் செய்யாதவர்களை பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மாணவர்களிடம், பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவேண்டாம் என அவர்களது பெற்றோர்களிடம் சொல்லச் சொன்னேன். அதை பின்தொடருங்கள். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் அடுத்து வண்டி வண்டியா கொட்ட போகிறார்கள். அது அத்தனையும் உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம் தான். என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கு தெரியும். அதை நான் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை. குழந்தைகளுக்கு எந்த காரியத்திலும் அழுத்தம் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்துள்ளது என்பதை தெரிந்துகொண்டு வழிநடத்துங்கள். கண்டிப்பாக குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த காரியத்தில் சாதித்துக் காட்டுவார்கள். சாதி, மத பிரிவினை வாதம் பக்கம் போகாதீர்கள். அந்த சிந்தனை உங்களை தொந்தரவு செய்ய அனுமதிக்காதீர்கள். விவசாயிகள் என்ன சாதி, மதம் பார்த்த விளைவிக்கிறார்கள்?
தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்தா உற்பத்தி செய்கிறார்கள்? போதை பொருளை அறவே ஒதுக்கி வைப்பதுபோல் சாதி, மதத்தையும் தூரமாக ஒதுக்கி வைத்துவிடுங்கள் அதுதான் எல்லோருக்கும் நல்லது. சமீப காலமாக பெரியாருக்கே சாதி சாயம் பூச நினைக்கிறார்கள். மத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதி சாயம் பூசுகிற மாதிரி ஒரு கேள்வி கேட்டு வைத்துள்ளனர். இதையெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம். அறிவியல் பூர்வமாக யோசியுங்கள், அதுதான் வந்துள்ள ஏஐ தொழில்நுட்பத்தை எதிர்கொள்ள ஒரே வழி”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.