பெயருக்கு பின்னால் சாதி பெயரா? - விளக்கம் அளித்த #NithyaMenen!
நடிகை நித்யா தனது பெயருக்கு பின்னால் உள்ள மெனன் சாதியப் பெயரல்ல என விளக்கமளித்துள்ளார்.
2006-ம் ஆண்டில் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நித்யா மேனன். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து வருகிறார். குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, காஞ்சனா - 2, ஒகே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. அவர் நடிப்பில் உருவான குமாரி ஸ்ரீமதி, மாஸ்டர் பீஸ் ஆகிய இணையத்தொடர்களும் நல்ல வரவேற்பினைப் பெற்றன.
தற்போது காதலில் தோல்வியடைந்த பெண் பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இதற்கு டியர் எக்ஸஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் காமினி இயக்குகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்திலும் இவர் நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் படத்துக்கு நித்யாவுக்கு தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் பெயர் சாதியப் பெயர் கிடையாது எனவும், மேனோன் (மேனன்) அல்ல மெனன் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர்,
“எனது பெயரை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எனக்கு அடையாளச் சிக்கல் இருக்கிறது. படப்பிடிப்பில் 2 ஷெட்யூல் முடிந்ததும், மேடம், கொச்சிக்கு டிக்கெட் புக் செய்யட்டுமா? எனக் கேட்கிறார்கள். என்னுடைய கார் எண் கன்னடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் பெயருக்கு முன்பு முன்னொட்டாக பெற்றோர்கள் பெயர் வைப்பது வழக்கம். N எனது அம்மா பெயர் நளினி, S எனது அப்பா பெயர் சுகுமார். அதனால் எனது பெயர் என்.எஸ். நித்யா என வைத்துக்கொண்டேன்.
கடவுச்சீட்டில் இந்த பெயரால் சில பிரச்னைகளை கொண்டுவருமென்பதால் மெனன் எனும் பெயரை வைத்தேன். ஜோதிடம் பார்த்து மெனன் என வைத்தேன். சாதியின் பெயரைப் பயன்படுத்த எனக்கும் எங்களது குடும்பத்துக்கும் பிடிக்காது. பெயரை கேட்பவருக்கு நான் எங்கிருந்து வந்தேன் எனத் தெரியக்கூடாது என வைத்தப் பெயர்தான் மெனன். ஆனால், அனைவரும் அதை கேரளத்தில் சாதியப் பெயரென (மேனோன்) நினைத்துக்கொண்டார்கள். நான் வைத்த பெயர் எனக்கே பாதிப்பாக அமைந்துவிட்டது” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.