தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு.!
கரூரில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர்.இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனிடையே கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், கரூர் மாவட்ட நிர்வாகி புவன் ராஜ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமூக வலைதளப் பக்கத்தில் இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி என்றும் இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்கள் புரட்சி செய்தது போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும் என்று பதிவிட்டார். இந்த பதிவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அதனால் ஆதவ் அர்ஜுனா அந்த பதிவை நீக்கினார்.
இந்நிலையில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.