Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு...! என்ன நடந்தது?...

07:07 AM Jan 20, 2024 IST | Web Editor
Advertisement

வீட்டு வேலை செய்து வந்த பட்டியலின இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தியதுடன், நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்ன நடந்தது?... விரிவாக பார்க்கலாம் செய்தித் தொகுப்பில்....

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரமணி-செல்வி தம்பதியர். பட்டியலினத்தைச் சேர்ந்த இந்த தம்பதியருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் வேலைக்காக மும்பை செல்வதாக கூறிவிட்டுச் சென்ற வீரமணி மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன் பின்னர் பல்வேறு இடங்களில் வீட்டு வேலைகளை செய்து வந்த செல்வி, சமீபத்தில் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பணிக்குச் சேர்ந்து தனது 18 வயது மகளையும், 16 வயது மகனையும் வளர்த்து வந்துள்ளார். செல்வியின் மகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராக வேண்டும் என்பதே கனவாக இருந்த நிலையில், அவர்களது வறுமை அதற்கு இடமளிக்கவில்லை.

அந்த சமயத்தில் செல்விக்கு அவரது தோழி ஒருவர் மூலம் சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூவில் வசிக்கும், ஆண்ட்ரூ மற்றும் அவரது மெர்லினாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகனான ஆண்ட்ரூவும், மருமகள் மெர்லினாவும், செல்வியிடம் உங்கள் மகளை மருத்துவராக்கி காட்டுகிறோம் என வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்ணை தங்களுடன் அழைத்துச் செல்வதாக கூறிய அவர்கள், படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் வீட்டு வேலைகளை செய்தால், அதற்கும் சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளனர். அதனை நம்பி செல்வி மகளை அவர்களுடன் அனுப்பியதாக தெரிகிறது.

ஆனால் சொன்னபடி இளம்பெண்ணை மருத்துவம் படிக்கவைக்க எந்தவித ஏற்பாடுகளும் செய்யாத ஆண்ட்ரூ-மெர்லினா தம்பதியர், இளம்பெண்ணை கடுமையாக வேலைவாங்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் வீட்டு வேலைகளை செய்வதற்காக மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறிய நிலையில், வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த இளம்பெண், வேலை செய்ய விருப்பமில்லாமல், தாயிடம் திரும்பிச் செல்ல விரும்புவதாக ஆண்ட்ரூ-மெர்லினா தம்பதியரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இளம்பெண்ணை செருப்பு, துடைப்பம், கரண்டி உள்ளிட்டவற்றால் கடுமையாக தாக்கி, அவரை பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பி வந்துவிடுவதாக சிறுமி உறுதியளித்த நிலையில், அவரை வீட்டிற்குச் செல்ல ஆண்ட்ரூ-மெர்லினா தம்பதியர் அனுமதித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற இளம்பெண்ணின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததைக் கண்ட தாய், அதிர்ச்சியடைந்து அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். மருத்துவரிடம் நடந்தவற்றை இளம்பெண் கூறிய நிலையில், மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் இளம்பெண் மற்றும் அவரது தாயிடம் இருந்து புகாரைப் பெற்று விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடம் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், வழக்கு விசாரணை அந்த காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி நீலாங்கரை காவல் நிலையத்திலும் இளம்பெண் தனது தாயுடன் சென்று புகார் அளித்து நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். அதனடிப்படையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரூ மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆண்ட்ரூ-மெர்லினா தம்பதியர் தன்னை அடித்தும், சூடு வைத்தும் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ள இளம்பெண், தன்னை அவர்கள் நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்தியதாகவும் கண்ணீர் மல்க அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மருத்துவம் படிக்க வைப்பதாக கூறியதை நம்பியே மகளை அவர்களுடன் அனுப்பியதாகவும், ஆனால் சற்றும் இரக்கமின்றி தனது மகளை அவர்கள் பல்வேறு சித்திரவதைகளை செய்துள்ளதாகவும் கூறி இளம்பெண்ணின் தாய் செல்வி கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தது.

"எளிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை வெறியாட்டங்கள் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும்" என கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல 18 வயது இளம்பெண்ணை அதிகாரத் திமிர் காரணமாக சித்திரவதை செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், பூதாகரமாக வெடித்துள்ள இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Next Article