சிவகங்கை அருகே புல்லட் ஓட்டியதால் கல்லூரி மாணவர் கைகள் வெட்டப்பட்ட வழக்கு - தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரணை!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலபிடாவூரை சேர்ந்த அய்யாசாமி (21) சிவங்கையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் கடந்த பிப்.12ஆம் தேதி கல்லூரி முடிந்து தனது புல்லட் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இடைமறித்த ஒரு சமூக இளைஞர்கள், அய்யாசாமியின் சாதிப் பெயரை சொல்லி திட்டி, நீ எல்லாம் புல்லட்டில் வருவாயா? என கேட்ட படியே வாளால் அவரை வெட்ட முயன்றுள்ளனர்.
இதில் அச்சமடைந்த அய்யாசாமி கைகளால் தடுத்ததில், அவருடைய இரண்டு கைகளிலும் வாள் வெட்டு விழுந்தது. இதில், வலது கை கடுமையாக வெட்டுக் காயம் அடைந்தது. அய்யாசாமி அங்கிருந்து தப்பி சென்று பெற்றோருக்கு தகவல் அளித்து மயங்கி விழுந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அய்யாசாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக, இன்று தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், எஸ்.பி ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோருடன் பாதிக்கப்பட்ட இளைஞரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் இளைஞரின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டு தொகையாக 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.