அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்தி ராவ், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக கூறி தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்யகோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “நான் 2017 ஆம் ஆண்டு சட்டப் படிப்பு முடித்து, பார் கவுன்சில் பதிவு
செய்தேன். முதுநிலை சட்டப் படிப்பையும் முடித்திருக்கிறேன். தமிழ்நாடு அரசின்
சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில் சட்ட அலுவலர்
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான அனைத்து தகுதியும் பெற்றிருந்த நிலையில், உரிய விபரங்களுடன் விண்ணப்பித்திருந்தேன்.
கடந்த 10ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொடர்பான முடிவு
வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. உரிமையியல், குற்றவியல், மேல்முறையீட்டு வழக்குகள், சீராய்வு மனுக்கள் என
பல்வேறு பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆஜராகி ஏராளமான
உத்தரவுகளை பெற்றிருந்தும், நான் தேர்வு செய்யப்படவில்லை.
ஆனால் என்னை விட அனுபவம் குறைந்த பல நபர்கள், அரசு வழக்கறிஞர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்விற்கான அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் அளித்த மனு , நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.18) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இதில் நீதிமன்றம் தலையிட இயலாது. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு” என தெரிவித்தனர்.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி
“மனுதாரர் அரசு வழக்கறிஞர் பணியிடத்திற்காக விண்ணப்பித்திருந்த நிலையில்,
அவர் தேர்வாகாததால் ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்யுமாறு கோரியுள்ளார். அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” எனத் தெரித்தார். இதையடுத்து வழக்கறிஞர் சக்தி ராவ் அளித்த இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உ த்தரவிட்டனர்.