விராட் கோலியின் One8 கம்யூன் பப் மீது வழக்குப்பதிவு!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள ஒன்8 கம்யூன் பப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் பப் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் இயங்கி வருகிறது. பெங்களூரின் எம்ஜி சாலையில் உள்ள ரத்னம் காம்ப்ளக்ஸிலும் இந்த பப் இயங்கி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் இயங்கி வரும் பப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோலிக்கு சொந்தமான பப் மட்டுமின்றி எம்ஜி சாலையில் இயங்கும் பல்வேறு பப்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்பட்டதற்காக எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளதாகப் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் பப்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட போலீசார் அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவு 1.30 மணி வரை இந்த பப்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் இந்த பப்களில் பாடல்கள் போடப்படுவதால் தங்களால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடிவதில்லை என அப்பகுதி மக்கள் புகாரளித்த நிலையில், போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே உள்ள ஒன்8 கம்யூன் பப், விதிகளை மீறி அதிக நேரம் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.