வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு - IUMLஐ தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் கடத்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து வக்ஃப் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவில் அந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இதற்கிடையே, வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 17 மணி நேர விவாதத்துக்கு பின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அந்த மசோதா குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை பரிசீலித்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியானது.
வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அலுவல்கள் இன்று தொடங்கியவுடன் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் , தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு வக்பு வாரிய சட்டத்திருத்த்துக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்கக்கோரி முறையிட்டார்.
இந்த நிலையில் வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.கவின் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் மக்களவை கொறடாவுமாகிய ஆ.ராசா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையிலும், அதற்கு எதிராகவும் உள்ள வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.