பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதார்கள் தரப்பு, இறுதி வாக்காளர் பட்டியலில் 3.66 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. சம்பந்தபட்ட நபர்களுக்கும் தெரிவிக்கவில்லை. தற்போதும் வாக்காளர் பட்டியல் வெளிப்படையானதாக இல்லை. பல்வேறு குழப்பங்கள் நிறைந்ததாக உள்ளது. முதலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என்பதையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. 2003 ஆண்டு தேர்தல் ஆணைய விதிமுறைகளை தேர்தல் ஆணையமே மீறிவருகிறது என்று மனுதாரர் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அப்போது நீதிபதிகள், நீக்கப்பட்டவர்கள் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் மீண்டும் சேர்க்கப்பட்டவர்கள் எத்தனை பேர், புதிய வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் நடவடிக்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் பணிகளுக்குப் பணியாளர்கள் செல்ல வேண்டி உள்ளதால் மீண்டும் வாக்களர் பட்டியல் விவகாரங்களை ஆராய நேரம் இல்லை. மேலும் தற்போது புதிய உத்தரவுகள் பிறப்பித்தால் தேர்தலை பாதிக்கும் என்று வாதிட்டார்.
தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.