எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு!
தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 6 பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டு இன்று காலை ஊருக்கு திரும்பியுள்ளனர். அந்த காரை நீதிமன்ற ஊழியர் வாசுதேவன் ராமநாதன் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தை பகுதியில் வந்த போது தூத்துக்குடியில் இருந்து அரியலூருக்கு ஜிப்சம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதி விபத்திற்குள்ளானது.
இதில் காரின் ஒரு பகுதி லாரிக்குள் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் வாசுதேவன் ராமநாதன், வழக்கறிஞர் தனஞ்செயன் ராமசந்திரன், பாதுகாவலர் நவீன் குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த், நீதிமன்ற ஊழியர்கள் உதயசூரியன், ஸ்ரீதர்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் குமார் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த், நீதிமன்ற ஊழியர் உதயசூரியன் ஆகியோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் 3 பேர் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும், ஒருவரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்தினை விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞான ஜெரீதா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது