டெல்லி கார் வெடி விபத்து : காவல் ஆணையர் விளக்கம்
டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்து, வெடித்து சிதறியது. இச்சம்பவம் நடைபெற்ற இடம் பிரதான மார்க்கெட் பகுதியாகும். இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
இதனை தொடர்ந்து தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெல்லி காவல்துறையும் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”டெல்லியின் செங்கோட்டை பகுதிக்கு அருகில், கௌரி சங்கர் மற்றும் ஜெயின் கோயில்களுக்கு அருகில், மாலை 6:52 மணியளவில் சிக்னலில் நின்றிருந்த ஒரு மினிவேன் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்றது தொடர்ந்து FSL, NIA உள்ளிட்ட அமைப்புகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றன” என்றார் . மேலும் அவர், இந்த கார் வெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பு கொண்டு பேசியதாகவும் இந்த கார் வெடிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்களை அவரிடம் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.