கர்நாடகாவில் தேர் சாய்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு!
கர்நாடகாவில் ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே திருவிழாவையொட்டி நேற்று தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. அப்போது 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேருடன் சேர்த்து நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் வந்தன.
இந்த நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியின் போது திடீரென லேசான காற்றுடன் மழை பெய்ததால் 152 அடி உயர தேர் பக்தர்களின் மேல் சாய்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மேலும் தேரின் அடியில் 11 பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் சாலையோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இதையடுத்து தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டு ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த லோகித் (வயது 24) என்ற ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். இதேபோல், பெங்களூருவின் கெங்கேரியைச் சேர்ந்த ஜோதி (14) என்பவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் (2024) மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்ததில் 2 பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.