பயிற்சியின்போது கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு உரையாடல்களையும் படம் பிடிப்பது வேதனை அளிக்கிறது - ரோஹித் சர்மா X தளத்தில் பதிவு!
கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் ஒவ்வொரு செயல்களையும் கேமராவில் பதிவு செய்வது வேதனை அளிக்கிறது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 68 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 67வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் படிக்கல் டக் அவுட் ஆகி வெளியேறினார். மார்கஸ் ஸ்டொய்னிஸுடன் கரம் கோர்த்த கே.எல்.ராகுல் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார். இதனிடையே ஸ்டொய்னிஸ் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹூடேவும் 11ரன்களுக்கு நேஹல் வதேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து கே.எல்.ராகுல் மற்றும் பூரான் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை மளமளவென உயர்த்தியது. பூரான் 29 பந்துகளுக்கு 75 ரன்களை எடுத்து அவுட் ஆனார். கே.எல்.ராகுலும் 55 ரன்கள் எடுத்து பியூஸ் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்களை இழந்து 214 ரன்களை குவித்தது.
215 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் ஓப்பனர்களான ரோஹித் சர்மா – டெவால்ட் ப்ரெவிஸ் ஜோடி நிதானமாக ஆடி ஸ்கோரை ஏற்றியது. ரோஹித் 38 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். ப்ரெவிஸ் 23 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஏமாற்றவே இஷன் கிஷன் 14 ரன்கள், ஹர்திக் பாண்டியா 16 ரன்கள், நேஹல் வதேரா ஒரு ரன் என மும்பை அணி முக்கியது.14வது ஓவரில் களமிறங்கிய நமன் திர் அட்டகாசமாக ஆடி 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரி என 68 ரன்களை குவித்து ஸ்கோரை ஏற்றினார். இப்படியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டமுடியாமல் 196 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆட்டத்தின் முடிவில் நமன் திர், ஷெஃபர்ட் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறி மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டனும், அணியின் ஆல் ரவுண்டருமான ரோஹித் சர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு தற்போது விவாத பொருளாகியுள்ளது.
https://x.com/ImRo45/status/1792136215015424426
ரோஹித் சர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
”கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் நுழைவது மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது எல்லாம் கேமராக்கள் பயிற்சியின் போது அல்லது போட்டி நாட்களில் அணியின் வீரர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தனிமையில் அல்லது ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசுவதை, விளையாடுவதை படம் பிடிக்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், உரையாடலையும் அவை பதிவு செய்கின்றன.
எனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் ஏற்கெனவே நான் கேட்டுக் கொண்டாலும் அதையும் மீறி அவை ஒளிபரப்பப்பட்டது, இது தனியுரிமையை மீறுவதாகும்.
பிரத்தியேகமான தகவலை தருகிறோம், புதுமையான தகவலை தருகிறோம் என்கிற பெயரில் கிரிக்கெட் வீரர்களின் அந்தரங்கத்தில் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை உடைக்கும். நல்ல உணர்வு மேலோங்கட்டும்..” என பதிவிட்டுள்ளார்.