“கற்றுக் கொண்ட தமிழை பயன்படுத்த முடிவதில்லை!” - X தள பயனரின் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்
“நீங்கள் தமிழ் பேசுவீர்களா?” என்ற X தள பயனரின் கேள்விக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார்.
இந்திய கோடீஸ்வரர்களுள் ஒருவரும், தொழிலதிபருமானவர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா. அவர் தான் படித்த பள்ளியில், திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறித்து நினைவுகளை, தனது X தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது :
“எனது நினைவகத்திலிருந்து சில விஷயங்களை திரைப்பட ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். லவ்டேலில் நான் படித்த பள்ளி, திரைப்பட இயக்குநர்களின் ஹாட்ஸ்பாட் ஆகிவிட்டது. சமீபத்தில் ‘தி ஆர்ச்சீஸ்’ மற்றும் OTT தொடரான ‘பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை’ படப்பிடிப்புகள் இங்கு நடத்தப்பட்டன. அந்த அழகான, 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகம் எப்போதுமே திரைத்துறையினர் விரும்பும் இடமாக இருக்கிறது என்பது நினைவுக்கு வந்தது.
For movie buffs, here’s some trivia from my memory bank:
My old high school—Lawrence, Lovedale—seems to have become a hotspot for film directors. Recently it’s been the location of ‘The Archies’ and the OTT series ‘Big Girls Don’t Cry.’
But it reminded me that the beautiful,… pic.twitter.com/D6mG3sBECW
— anand mahindra (@anandmahindra) May 2, 2024
அறுபதுகளின் பிற்பகுதியில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தென்னிந்தியப் படங்களுக்கான படப்பிடிப்பு இங்கு அதிகம் நடத்தப்பட்டன. 1968-ம் ஆண்டில், ‘நேர்வழி’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் படப்பிடிப்பைப் பார்த்து, பள்ளியின் புல்வெளியில் மற்ற குழந்தைகளுக்கு மத்தியில் மயங்கி மெய்மறந்து கிடந்தது எனக்கு நினைவிருக்கிறது. முன்னணி நடிகர்களான ஜெய்சங்கர் மற்றும் வாணிஸ்ரீ கவ்பாய் உடையில் இருந்தனர்!
இத்தாலி இயக்குநரான செர்ஜியோ லியோனின் ‘ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ்’ படம் வெளியான பிறகு, ஸ்பெகட்டி வெஸ்டர்ன் என்ற ஜானர் உருவாக்கப்பட்டது. இயல்பாகவே, தமிழ் சினிமா அந்த ஜானரை பின்பற்றத் தொடங்கியபோது, அது ‘கறி வெஸ்டர்ன்’ என்று அழைக்கப்பட்டது. நல்லவேளை அந்த ஜானர் நீடிக்கவில்லை...” என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : வறண்டு போன குற்றால அருவிகள் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
இந்த பதிவுக்கு கீழ் கருத்துப் பதிவிட்ட X தள பயனர் ஒருவர், “சார் நீங்கள் தமிழில் பேசுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, “துரதிர்ஷ்டவசமாக, நான் பள்ளிப்பருவத்தில் கற்றுக்கொண்ட தமிழை, பெரும்பாலும் பயன்படுத்த முடிவதில்லை!” என்று பதிவிட்டுள்ளார்.