"அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை!" - ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் லபுஷேன் கருத்து!!
அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் ஆனது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அசத்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், மார்னஸ் லபுஷேன் 58 ரன்களும் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்தப் போட்டியில் லபுஷேன் நிதானமாக விளையாடி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இந்த நிலையில், அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை என மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
அதிசயங்களை நம்பாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த அனைத்து விஷயங்களையும் மேலிருந்து ஒருவர் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான பிளேயிங் லெவன் குறித்து இறுதிப்போட்டிக்கு முன் தினம் இரவு வரை எதுவும் தெரிவிக்கவில்லை. இறுதிப்போட்டியில் நான் விளையாடுவேனா, மாட்டேனா எனத் தெரியாமல் எனது படுக்கையில் அமர்ந்திருந்தேன். நான் விளையாடவில்லையென்றால் எப்படி அணியின் வெற்றிக்கு பங்களிப்பேன்? ஒருவேளை ஃபீல்டிங்கில் எனது பங்களிப்பை கொடுப்பேனோ? என நினைத்துக் கொண்டிருந்தேன். இரவு 10 மணிக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி மாற்றமின்றி களமிறங்குகிறது என அணி நிர்வாகம் தெரிவித்தது. அது மிகப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது.
நான் கிட்டத்தட்ட 5 முறை அணியில் இடம்பெறவில்லை என நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடக்கத்தில் நான் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. பின்னர், மாற்று வீரராக வாய்ப்பு கிடைத்தது. அதனால், அதிசயங்களை நம்பால் இருப்பது மிகவும் கடினமாக உள்ளது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடினார். அவர் ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் இருக்க வேண்டும் என விரும்பினேன். அவரது இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது என்றார். உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் தொடக்கத்தில் இடம்பெறாமல், பின்னர் அஸ்டன் அகருக்குப் பதிலாக மார்னஸ் லபுஷேன் அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.