'கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் கைதிகளை உயிருடன் பிடிக்க முடியாது' - ஹமாஸ் எச்சரிக்கை
''கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எந்தவொரு பணயக் கைதிகளும் உயிருடன் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள்'' என ஹமாஸ், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 17,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் படைத் தலைவர் 'ஹமாஸ் அமைப்பு அழிந்து வருகிறது, தீவிரவாதிகள் சரணடைந்து வருகிறார்கள்' என தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ், ஞாயிற்றுக்கிழமையன்று (டிச. 10) கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எந்தவொரு பணயக்கைதிகளும் உயிருடன் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஹமாஸ் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில் கூறியதாவது ;
"பாசிச எதிரியோ அதன் திமிர்பிடித்த தலைமையோ... அல்லது அதன் ஆதரவாளர்களோ... கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் கைதிகளை உயிருடன் பிடிக்க முடியாது ''என தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இஸ்ரேலை எச்சரித்ததை அடுத்து, இன்று தெற்கு காசாவின் முக்கிய நகரமான கான் யூனிஸ் நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. போரை உடனடியாக நிறுத்துவது தொடர்பான ஐநாவின் தீர்மானத்தை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ள நிலையில், போரை நிறுத்தும் முயற்சியைக் கைவிடப் போவதில்லை என ஐநாவின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.