கேன்ஸ் திரைப்பட விழா | ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்ற முதல் இந்திய இயக்குநர் பாயல் கபாடியா யார்?
கேன்ஸ் திரைப்பட விழாவில் 2-வது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸை’ இந்திய திரைப்படமான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” வென்றுள்ளது. இதன் மூலம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையைப் பாயல் கபாடியா பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா, கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்படும் படங்கள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட படங்கள் அடங்கும். இந்த விழாவில் உலகம் முழுவதுமிருந்து திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனா்.
இதில் பல்வேறு மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதன்படி, இந்திய ஆவணப்பட இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் உருவான, ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light) திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் கனி கஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பின் பங்குபெற்ற இந்திய திரைப்படம் இது.
இதனையடுத்து, விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து, இத்திரைப்படத்திற்கு கிராண்ட் பிரிக்ஸ் (grand prix) விருது வழங்கப்பட்டது. இத்திரைப்படம் இவ்விருதைப் பெற்ற முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மூலம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையைப் பாயல் கபாடியா பெற்றுள்ளார். பாம் டி’ஓர் விருதுக்கு அடுத்தபடியாக ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதுதான் கேன்ஸ் விழாவின் உயரிய விருதாகும்.
யார் இந்த பாயல் கபாடியா?
மும்பையில் பிறந்தவர் பாயல் கபாடியா. இவர் கலைஞர் நளினி மலானியின் மகள். பாயல் ஆந்திராவில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் பயின்றார். பின்னர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதார பட்டம் பெற்றார். சோபியா கல்லூரியில் ஓராண்டு முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
திரைப்படங்களில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததால், புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் (FTTI) பயின்றார். அங்கு அவர் திரைப்பட இயக்கத்தைக் கற்றுக் கொண்டார். கபாடியாவின் முதல் ஆவணப்படமான 'எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்' 2021 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கோல்டன் ஐ’ விருதை வென்றது. இந்த ஆவணப்படம் 2015இல் புனே திரைப்படக் கல்லூரியில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
2015 இல் நடந்த இந்தப் போராட்டங்களின் போது, திரைப்பட கல்லூரியின் மாணவராக இருந்தார் பாயல் கபாடியா. அப்போது கல்லூரி நிர்வாகம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இந்த போராட்டம் நான்கு மாதங்கள் நடைபெற்ற நிலையில், அதில் பாயல் கபாடியா முக்கிய அங்கமாக இருந்தார். இதனால் நிர்வாகம் அவருக்கான உதவித் தொகையையும் நிறுத்தியது.
இதனையடுத்து போலீசார், பாயல் உட்பட 35 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதன் பிறகு குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட 35 மாணவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.