கேன்ஸ் திரைப்பட விழா - இந்தியாவுக்கு கிடைத்த விருதுகள்!
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சார்பில் நான்கு விருதுகள் பெறப்பட்டுள்ளன.
உலகப் புகழ் பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த மே 14 முதல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் பல்வேறு பிரிவுகளில் கீழ் படங்கள் திரையிடப்பட்டும், விருதுகளும் வழங்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் இந்த விழாவில் இந்திய சார்பில் நான்கு விருதுகள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறந்த சாதனைக்கான பியர் ஆசிங்யு விருது வழங்கப்பட்டது. உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது 2024ஆம் ஆண்டிற்கு சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசியாவிலிருந்து இவ்விருதை பெறும் முதல் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதுபோல சிறந்த நடிகைக்கான விருதை இந்தியாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா
பெற்றார். அன் செர்டன் ரெகார்ட்ஸ் பிரிவில், ஷேம்லெஸ் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை பெற்றார். இந்த விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை இவர் பெற்றார்.
அதுபோல சிறந்த குறும்படத்திற்கான லா சினிப்பிரிவில் இந்தியத் திரைப்படமான ‘சன்பிளவர்ஸ்’ முதல் பரிசை வென்றது. 16 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்டபத்தை மைசூரை சேர்ந்த சித்தானந்த் எஸ்.நாயக் இயக்கி இருந்தார். புனேவை சேர்ந்த திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இக்குறும்படத்தை தயாரித்துத் இருந்தனர். திருடு போன சேவலை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
கேன்ஸ் திரைப்பட விழாவின் இரண்டாவது உயரிய விருதான ‘கிரண்ட் பிரிக்ஸை’ இந்திய திரைப்படமான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” வென்றுள்ளது. இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாயல் கபாடியா.